பின்னணி
- குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இரண்டு நாள் மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டின் நோக்கம், இந்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைப்பு தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்குவதாகும்.
- இந்த மாநாட்டின் மூலம் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்களின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய யோசனைகளைப் பரிமாறிக்கொள்ளவும், பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முடியும்.
- விரைவான நீதி வழங்குவதற்கான மத்தியஸ்தம், ஒட்டுமொத்த சட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பழமையான, காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை அகற்றுதல், நீதி அணுக்கத்தை மேம்படுத்துதல், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைத்தல், விரைவான பைசலை உறுதி செய்தல், சிறந்த மத்திய, மாநில ஒத்துழைப்புக்கான மாநில மசோதாக்கள் தொடர்பான விஷயங்களில் சமச்சீர் நிலையை கொண்டு வருதல், மாநில சட்ட முறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட மாற்று தாவா தீர்வுகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் இந்த மாநாட்டில் விவாதங்கள் நடைபெறும்.
பிரதமர் நரேந்திர மோடி உரை
- அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.
- மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்ட அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களின் முக்கியமான கூட்டம், பிரம்மாண்டமான ஒற்றுமை சிலையின் கீழ் நடைபெற்று வருவதாகவும், விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் இந்தக் கட்டத்தில், சர்தார் படேலின் உத்வேகமே சரியான திசையில் நம்மைக் கொண்டு சென்று, நமது இலக்குகளை அடைய உதவும் என்றும் குறிப்பிட்டார்.
- நம்மைப் போன்ற வளரும் நாட்டில் ஆரோக்கியமான மற்றும் நம்பிக்கையான சமுதாயத்திற்கு நம்பகமான மற்றும் விரைவான நீதி பரிபாலனத்தின் அவசியத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
- ஒவ்வொரு சமூகத்திலும் நீதித்துறை அமைப்பும் பல்வேறு நடைமுறைகளும் மரபுகளும் காலத்தின் தேவைக்கேற்ப வளர்ச்சியடைந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். “நீதி வழங்கப்படுவதைக் காணும்போது, அரசியலமைப்பு அமைப்புகளின் மீது நாட்டு மக்களின் நம்பிக்கை வலுப்பெறுகிறது.
- மேலும் நீதி வழங்கப்படும் போது சாமானியர்களின் நம்பிக்கை உயரும். நாட்டின் சட்டம் ஒழுங்கை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் மிகவும் முக்கியமானவை’’ எனவும் திரு மோடி தெரிவித்தார்.
- இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிப் பயணம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், முக்கியமான சவால்களை எதிர்கொண்டாலும் நாம் நிலையான முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
- "நமது சமூகத்தின் மிகப்பெரிய அம்சம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் போது உள்நாட்டில் தன்னை மேம்படுத்திக்கொள்ளும் போக்கு ஆகும்" என்று திரு மோடி கூறினார்.
- தொடர்ச்சியான முன்னேற்றத்தின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், ஒவ்வொரு அமைப்பும் சீராக இயங்குவதற்கு இது இன்றியமையாத தேவை என்று சுட்டிக்காட்டினார்.
- “நமது சமூகம் பொருத்தமற்ற சட்டங்களையும் தவறான பழக்கவழக்கங்களையும் களைந்து கொண்டே இருக்கிறது.
- இல்லையெனில், எந்தவொரு பாரம்பரியமும் மரபுவழியாக மாறும்போது, அது சமூகத்திற்கு ஒரு சுமையாக மாறிவிடும்", என்று அவர் மேலும் கூறினார், "நாட்டு மக்கள் இல்லாமையையோ அல்லது அரசின் அழுத்தத்தையோ உணரக்கூடாது." என்றார் அவர்.
- இந்தியக் குடிமக்களிடமிருந்து அரசின் அழுத்தத்தை அகற்றுவதற்கான சிறப்பு முக்கியத்துவம் குறித்து விளக்கிய பிரதமர், கடந்த 8 ஆண்டுகளில், இந்தியா ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பழைமையான சட்டங்களை ரத்து செய்துள்ளதாகவும், 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணக்கங்களை குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
- புதுமை மற்றும் வாழ்க்கையின் எளிமைக்கான பாதையைத் தடுக்கும் சட்டத் தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். "இந்தச் சட்டங்களில் பல அடிமைத்தன காலத்திலிருந்தே தொடர்கின்றன" என்று அவர் கூறினார்.
- மேலும், அடிமை முறை முதல் பல பழைய சட்டங்கள் மாநிலங்களில் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும், இந்த மாநாட்டில் இதுபோன்ற சட்டங்களை ஒழிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
- "இந்த விடுதலையின் அமிர்த காலத்தில், அடிமைத்தன காலம் முதல் நடைமுறையில் உள்ள சட்டங்களை ஒழித்து புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என்று திரு மோடி கூறினார்.
- மக்களுக்கு எளிதாக வாழ்க்கை மற்றும் நீதி பரிபாலனம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அதே வேளையில், தற்போதுள்ள மாநிலங்களின் சட்டங்களை மறுஆய்வு செய்வதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
- நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவது மிகப்பெரிய சவாலாக காணப்படுவதாகவும், இந்த திசையில் நீதித்துறை மிகுந்த தீவிரத்துடன் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
- மாற்றுத் தாவா தீர்வுக்கான வழிமுறையை சுட்டிக்காட்டிய பிரதமர், நீண்ட காலமாக இந்தியாவின் கிராமங்களில் இது நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், இப்போது மாநில அளவில் இதனை மேற்கொள்ளலாம் என்றும் பரிந்துரைத்தார்.
- "மாநிலங்களில் உள்ளூர் மட்டத்தில் சட்ட அமைப்பின் ஒரு பகுதியாக அதை எவ்வாறு மாற்றுவது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என்று திரு மோடி கூறினார்.
- குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், மாலை நேர நீதிமன்றங்கள் என்ற கருத்தை அப்போதைய அரசு அறிமுகப்படுத்தியதாக கூறினார்.
- பிரிவுகளின் அடிப்படையில் குறைவான தீவிரம் கொண்ட வழக்குகள் மாலை நீதிமன்றங்களால் எடுக்கப்பட்டன, இதன் விளைவாக குஜராத்தில் சமீபத்திய ஆண்டுகளில் 9 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் விளக்கினார்.
- பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகளை தீர்ப்பதற்கும், நீதிமன்றங்களின் சுமையை குறைப்பதற்கும் வழிவகுத்த லோக் அதாலத்களின் தோற்றத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.
- கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் இதன் மூலம் பெரிதும் பயனடைந்துள்ளனர்” என்று அவர் கூறினார்.
- நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதில் அமைச்சர்களின் பொறுப்பைக் குறிப்பிட்ட பிரதமர், சட்டத்திலேயே குழப்பம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் அதன் பாதிப்பைச் சுமக்க வேண்டியது சாமானியக் குடிமக்களே, நோக்கம் எதுவாக இருந்தாலும், சாதாரண குடிமக்கள் நிறைய பணம் செலவழிக்க வேண்டியுள்ளது என்றும் நீதியைப் பெறுவதற்கு அலைய வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "சட்டம் சாமானியனுக்குப் புரியும் போது, அதன் பலனே வேறு " என்று அவர் கூறினார்.
- மற்ற நாடுகளின் உதாரணங்களை எடுத்துரைத்த பிரதமர், நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ சட்டம் இயற்றப்படும்போது, அதை சட்டத்தின் வரையறைக்குள் விரிவாக விளக்கவும், இரண்டாவதாக, சாதாரண மனிதனால் புரிந்து கொள்ளக்கூடிய, எளிதாகச் சொல்லக்கூடிய மொழியில் சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
- சட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவைத் தீர்மானிப்பதுடன், புதிய சூழ்நிலையில் சட்டம் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். “நீதியை எளிதாக்குவதற்கான சட்ட அமைப்பில் உள்ளூர் மொழி பெரும் பங்கு வகிக்கிறது.
- தாய்மொழியில் இளைஞர்களுக்கான கல்விச் சூழலையும் உருவாக்க வேண்டும். சட்டப் படிப்புகள் தாய்மொழியில் இருக்க வேண்டும், நமது சட்டங்கள் எளிய மொழியில் எழுதப்பட வேண்டும், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் உள்ள முக்கியமான வழக்குகளின் டிஜிட்டல் நூலகங்கள் உள்ளூர் மொழியில் இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
- "சமூகத்துடன் நீதித்துறையும் வளரும்போது, அது நவீனத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் இயல்பான போக்கைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் நீதி அமைப்பு மூலமாகவும் தெரியும்” என்று மோடி கூறினார்.
- நீதித்துறை அமைப்பில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் வலியுறுத்திய பிரதமர், மின்-நீதிமன்றங்கள், மெய்நிகர் விசாரணைகளின் தோற்றம் மற்றும் மின்- வழக்கு தாக்கல்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.
- நாட்டில் 5ஜி வருகையுடன் இந்த அமைப்புகள் பெரும் ஊக்கத்தைப் பெறும் என்று திரு மோடி கூறினார். “ஒவ்வொரு மாநிலமும் அதன் அமைப்புகளைப் புதுப்பித்து மேம்படுத்த வேண்டும்.
- தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அதை தயாரிப்பது நமது சட்டக் கல்வியின் முக்கிய குறிக்கோளாகவும் இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
- விசாரணைக் கைதிகள் பிரச்சினையை எழுப்பி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் கூட்டுக் கூட்டத்தை நினைவுகூர்ந்த பிரதமர், இதுபோன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.
- விசாரணைக் கைதிகள் தொடர்பாக மனிதாபிமான அணுகுமுறையுடன் மாநில அரசுகள் செயல்பட வேண்டும், இதனால் நீதித்துறை மனித இலட்சியங்களுடன் முன்னேற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
- "திறமையான நாடு மற்றும் நல்லிணக்கமான சமுதாயத்திற்கு ஒரு உணர்வுபூர்வமான நீதி அமைப்பு அவசியம்" என்று திரு மோடி வலியுறுத்தினார்.
- அரசியலமைப்பின் மேன்மையைச் சுட்டிக் காட்டிய பிரதமர், அரசியலமைப்பு, நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்தின் தோற்றம் என்று கூறினார்.
- “அரசு, நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் என மூன்றுமே ஒரு வகையில் ஒரே தாயின் குழந்தைகள்தான். செயல்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், வாக்குவாதத்திற்கோ போட்டிக்கோ இதில் இடமில்லை.
- ஒரு தாயின் குழந்தைகளைப் போல, மூன்று அமைப்புகளும் இணைந்து தாய் பாரதிக்கு சேவை செய்ய வேண்டும், 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” என்று பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
- இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் திரு எஸ் பி சிங் பாகல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments