பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது. அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதில் அடுத்த 4 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.6,600 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. 2022-23-ம் நிதியாண்டு முதல் 2025-26-ம் நிதியாண்டு வரை இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்படும்.
பிரதமரின் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு முயற்சி (பிஎம்-டிஇவிஐஎன்இ) திட்டத்தின்கீழ் இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்படும். இந்தத் திட்டங்களுக்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி ஒதுக்கீடு செய்யும்.
இந்த நிதியின் கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, தொழிலகங்களுக்கு ஆதரவு, சமூக வளர்ச்சித் திட்டங்களை அமல் செய்தல், இளைஞர், பெண்கள் வாழ்வாதாரத்துக்கு வாய்ப்புகளை உருவாக்குதல், வேலைவாய்ப்புகளை பெருக்குதல் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
வடகிழக்கு கவுன்சில் அல்லது மத்திய அமைச்சகங்கள், ஏஜென்சிகள் மூலம் திட்டங்களை மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத் துறை அமல்படுத்தும்.
2022-23-ம் நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின்போது பிஎம்-டிஇவிஐஎன்இ திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே தற்போது திட்டத்துக்கான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
0 Comments