மத்திய தொல்லியல் துறையின், பெங்களூரு அகழாய்வு வட்டாரத்தின் கண்காணிப்பாளராக இருந்தவர், அமர்நாத் ராமகிருஷ்ணன்.
இவர், 2014 - 15ம் ஆண்டுகளில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு மேற்கொண்டார்.
அதில், சங்ககாலத்தைச் சேர்ந்த கட்டடம், சாயத் தொழிலுக்கான உலை, உறை கிணறு, காசு உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.
இங்கு, அதிக பரப்பளவில், சங்க கால வாழ்விடப் பகுதி வெளிப்பட்டது; இது இந்திய ஆய்வாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்தகட்ட அகழாய்வும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவர், அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பின், ஸ்ரீராமன் என்ற ஆய்வாளர், கீழடியில் ஆய்வு செய்து, குறிப்பிடும்படியான தொல்பொருட்கள் கிடைக்கவில்லை என, மத்திய தொல்லியல் துறைக்கு அறிக்கை அளித்தார்.
இதனால், கீழடி அகழாய்வை மத்திய தொல்லியல் துறை கைவிட்டது. இதையடுத்து, தொல்பொருட்கள், பெங்களூரு எடுத்துச் செல்லப்பட்டன. இதை ஆய்வாளர்கள் போராடி தடுத்தனர்.
மேலும், அமர்நாத்தை மீண்டும் தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், அகழாய்வு அறிக்கையை துரிதமாக வெளியிட வேண்டும் என்றும், பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
ஆனால், அவர், கோவாவுக்கு மாற்றப்பட்டார். தொல்லியல் ஆர்வலர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக, கடந்தஆண்டு செப்டம்பரில், அவர் மத்திய தொல்லியல் துறையின், சென்னை வட்டார ஆலய ஆய்வுப் பிரிவுக்கு, கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
அந்த பணியில் இருந்தபடியே, தம் குழுவினருடன், சென்னையில் வைக்கப்பட்டிருந்த கீழடி தொல்பொருட்களை வரைபடமாக மாற்றுவது, மண்பாண்டங்களில் உள்ள எழுத்துப் பொறிப்புகளை அடையாளம் காண்பது, கரிம வேதிப் பொருட்களின் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் காலத்தை நிர்ணயிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார்.
இதையடுத்து, டில்லியில் நேற்று மத்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குனர் வித்யாவதியிடம், அமர்நாத் ராமகிருஷ்ணன், இரண்டாண்டு அகழாய்வின் முழு அறிக்கையை சமர்ப்பித்தார்.
0 Comments