சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமையான எரிபொருளான இயற்கை எரிவாயுவின் உபயோகத்தினை ஊக்கப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பை தமிழ்நாட்டில் விரைவாக அமைக்க தேவையான விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கும் நோக்கத்தோடு இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கும், வாகன பயன்பாட்டிற்கும், 2.30 கோடி வீடுகளுக்கும் குழாயின் மூலம் இயற்கை எரிவாயு வழங்க இக்கொள்கை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம் சுமார் 35,000 கோடி ரூபாய் முதலீடு 8 ஆண்டுகள் கால அளவில் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொள்கையின் நோக்கம்
நகர எரிவாயு விநியோகத்திற்கான உட்கட்டமைப்பை விரைவாகச் செயல்படுத்துவதை உறுதி செய்தல், விரைவான அனுமதிகளை வழங்குதல், இயற்கை எரிவாயு பயன்பாட்டைப் படிப்படியாக ஊக்குவிக்க தேவையான விதிகள்/ ஒழுங்குமுறைகளை உருவாக்குதல், பாதுகாப்பான மற்றும் தடையில்லா இயற்கை எரிவாயுவினை விநியோகிக்க தேவையான உட்கட்டமைப்பை நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள் பராமரிக்க வலியுறுத்துதல், மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் திரவ இயற்கை எரிவாயுவை எரிபொருளாக ஏற்றுக்கொள்ள ஊக்குவித்தல் ஆகியவை இக்கொள்கையின் நோக்கமாகும்.
0 Comments