டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 48 கிலோ எடைப் பிரிவு இறுதி போட்டியில் 22 வயதான இந்தியாவின் நீது கங்காஸ், மங்கோலியாவின் லுட்சைகான் அல்டான்செட்செக்கை எதிர்த்து விளையாடினார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீது கங்காஸ் ஆக்ரோஷமாகத் தனது தாக்குதலை தொடங்கினார். தனது குத்துகளால் திறம்பட செயல்பட்டு லுட்சைகான் அல்டான்செட்செக்கை அதிரவைத்த நீது 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
81 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் 3 முறை ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவின் சவீட்டி பூரா, 2018ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்ற சீனாவின் லினா வாங்குடன் மோதினார்.
இதில் சவீட்டி பூரா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் சவீட்டி பூரா வெல்லும் 2-வது பதக்கம் இதுவாகும். 2014-ம் ஆண்டு அவர், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி இருந்தார்.
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வரலாற்றில் இதுவரை இந்தியா 12 தங்கம் வென்றுள்ளது. இதில் மேரி கோம் மட்டுமே 6 தங்கப் பதக்கங்களை வேட்டையாடி இருந்தார்.
அவரை தவிர்த்து சரிதா தேவி (2006-ம் ஆண்டு), ஜென்னி (2006), லேகா (2006), நிகத் ஜரீன் (2022) ஆகியோரும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தனர். தற்போது நீது கங்காஸ், சவீட்டி பூரா ஆகியோர் தங்கம் வென்று அசத்தி உள்ளனர்.
0 Comments