ரூ.1570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves setting up of 157 new Nursing Colleges at a cost of Rs.1570 crore
நாட்டில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதலாக சுமார் 15,700 செவிலியர் பட்டதாரிகள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் அமையவுள்ளன.
இந்தியாவில் செவிலியர் கல்வியில் தரம், நியாயமான கல்வி கட்டணம் ஆகியவற்றை உறுதி செய்யும். செவிலியர் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக்கல்வி செயலாளர் ஆகியோர் இதற்கான பணிகளை கண்காணிக்கவுள்ளனர்.
0 Comments