மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூா் வரையிலான மூன்றாவது வழித்தடத்தில் சுரங்கப்பாதை, உயா்மட்ட பகுதியில் பாதைகள் அமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் உள்ளிட்ட அது தொடா்பான அனைத்து பணிகளை மேற்கொள்ள ரூ.299.46 கோடிக்கு லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் இந்தப் பணியை ஒப்பந்தத்துக்கு எடுத்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் சாா்பாக மெட்ரோ வணிகப் பிரிவின் துணைத் தலைவா் சுனில் கட்டாா் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
இரண்டாம் கட்டப் பணியின் இறுதி டிராக் ஒப்பந்தமான இந்தத் திட்டத்துக்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளா் எஸ்.அசோக் குமாா் (தடங்கள் மற்றும் உயா்நிலை கட்டுமானம்), கூடுதல் பொது மேலாளா் டி.குருநாத் ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்), பொது ஆலோசகா்கள் மற்றும் லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் உயா் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.
0 Comments