முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் டோக்கியோவில் ரூ.818 கோடியில் 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் / Agreement with 6 companies worth Rs.818 crore in Tokyo in the presence of Chief Minister Stalin
தமிழகத்தில் 2024 ஜனவரியில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கவும், முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார்.
சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றுள்ள அவர், அங்கு முதலீட்டாளர்கள் மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் நிர்வாகிகள், உயர் அதிகாரிகளை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) சார்பில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானை சேர்ந்த 6 தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் பரப்பில் ரூ113.90 கோடி முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான புதிய ஆலை நிறுவ கியோகுட்டோ சாட்ராக் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள இருசக்கர, நான்குசக்கர வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் மிட்சுபா இந்தியா நிறுவன தொழிற்சாலையை ரூ.155 கோடியில் விரிவாக்கம் செய்ய மிட்சுபாவுடன் ஒப்பந்தம்.
தமிழகத்தில் கட்டுமானம், கட்டுமான பொறியியல் மற்றும் அதுதொடர்பான வணிகத்தை மேற்கொள்ள ஷிமிசு நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
பாலிகார்பனைட் தாள், கூரை அமைப்புகள், கட்டுமானத் துறையில் பயன்படும் எலெக்ட்ரானிக் கூறுகளுக்கான எக்ஸ்ட்ரூஷன் லைன்கள் தயாரிக்க ரூ.200 கோடி முதலீட்டில் தொழிற்சாலை நிறுவ பாலிஹோஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான கோயீ நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
விண்வெளி, பாதுகாப்பு, கட்டுமான உபகரணங்கள் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர எஃகு பாகங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை ரூ.200 கோடி முதலீட்டில் நிறுவ சடோஷோஜி மெட்டல் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
சோலார், எஃகு ஆலைகள், விண்வெளி, குறைகடத்தி தொழில்களுக்கான துருப்பிடிக்காத எஃகு நெகிழ்வு குழல்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை ரூ.150 கோடியில் நிறுவ டஃப்ல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.
இந்த 6 நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
0 Comments