சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக, 2022 செப்டம்பர் 19ல் டி.ராஜா நியமிக்கப்பட்டார்; 24ல் ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து, மூத்த நீதிபதியாக உள்ள எஸ்.வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.வி.கங்கா பூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.வி.கங்கா பூர்வாலா, 1962 மே 24ல் பிறந்தார்.
மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த தீபங்கர் தத்தா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, 2022 டிசம்பர் முதல், பொறுப்பு தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா பதவி வகித்து வருகிறார்.
தற்போது, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்; 2024 மே 23 வரை, பதவியில் தொடர்வார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலாவை நியமிக்க, 2023 ஏப்ரல் 19ல், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' பரிந்துரை செய்திருந்தது. தற்போது தான் நியமன அறிவிப்பை, மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
0 Comments