வான்வழிராணுவ தளவாட உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு பெற்று வரும் வேளையில், கடற்படைக்காக ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற பிரமாண்ட விமானம் தாங்கி போர்க் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இக்கப்பலின் வாயிலாக, 40 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான எடையை தாங்கக் கூடிய, விமானம் தாங்கி போர்க் கப்பல்களை தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.
மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்தில், வான்வழி மற்றும் கப்பல் வழி ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் அதிநவீன வசதிகள் உள்ளன.
இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 30 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும். இதில், பல்வேறு போர் விமானங்களை தரை இறக்கச் செய்யும் பயிற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து வாங்கி, இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல்களை துல்லியமாக தாக்கும் எம்.எச்., - 60 ஆர் ஹெலிகாப்டர், ஐ.என்.எஸ்., விக்ராந்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் 'ஹெல்பைர்' ஏவுகணைகள், துல்லிய தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகள், எம்.கே., - 54 ரக நீர்மூழ்கிக் குண்டுகள் போன்ற ஆயுதங்கள் உள்ள இந்த ரக ஹெலிகாப்டர், இம்மாத துவக்கத்தில் முதன்முறையாக ஐ.என்.எஸ்., கோல்கட்டா கப்பலில் தரையிறங்கியது.
இந்திய கடற்படையின் கண்காணிப்பு திறன்களுக்கு மேலும் பலத்தை சேர்க்கும் வகையில், இது விக்ராந்த் கப்பலிலும் தரையிறக்கப்பட்டுஉள்ளது.
0 Comments