ஶ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது / Chandrayaan-3 successfully launched from Sri Harikota Space Research Centre
பல நாடுகள் நிலவில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆராய்ச்சி மேற்கொண்டது இல்லை. இந்தியா மட்டுமே நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் திட்டத்தை தொடங்கியது.
முதல் முறையாக கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் -1 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வந்து ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து முடித்தது.
பின்னர் சந்திரயான்-2 திட்டத்தில் நிலவின் பரப்பில் கருவிகளை இறக்கி ஆய்வுகளை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆனால் சந்திரயான்-2 லேண்டரான விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி திட்டம் தோல்வியில் முடிந்தது. கடந்த முறை அடைந்த தோல்வியில் இருந்து இம்முறை தவறுகளை திருத்திக் கொண்டு சரியாக நிலவில் லேண்டர் கருவியை தரையிறங்கும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து நேற்று மதியம் 2.30 மணிக்கு எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சரியாக 2.30 மணிக்கு ராக்கெட்டின் 2 எரிபொருள் நிரம்பிய அலகுகள் எறியூட்டப்பட்டு தீயை வெளியேற்றிய படி ராக்கெட் விண்ணில் பாயத் தொடங்கியது.
சரியாக 127 வினாடிகளில் 2 எரிபொருள் அலகுகள் பிரிந்தன. அதைத் தொடர்ந்து 194 வினாடியில் ராக்கெட்டின் மேல் பக்க கவசமும், 305வது நொடியில் இரண்டாவது எரிபொருள் அலகும் பிரிந்தது.
தொடர்ந்து விண்கலனை சுமக்கும் பிரிவு பயணித்து இறுதியாக 17வது நிமிடத்தில் விண்கலம் புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
0 Comments