தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 4-வது நாள் போட்டியின்போது 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் ராஜேஷ் ரமேஷ், ஐஸ்வர்யா மிஸ்ரா, அமோஜ் ஜேக்கப், சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய கலப்பு அணி 3.14.70 விநாடிகளில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது.
மேலும் இந்தப் பிரிவில் தேசிய சாதனையையும் இவர்கள் உடைத்தனர். முந்தைய தேசிய சாதனை 3.15.71 விநாடிகளாக இருந்தது. மேலும், உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் சர்வேஷ் ஏ. குஷாரே 2.26 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
மகளிர் ஹெப்டத்லான் பிரிவில் 5,840 புள்ளிகளைக் குவித்த இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 2-வது இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம் 2024-ம் ஆண்டு பாரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் முரளி சங்கர் தகுதி பெற்றார்.
இதே பிரிவில் சீன தைபே வீரர் யு தாங் லின் முதலாவது இடம் பிடித்து தங்கம் வென்றார். யு தாங் லின் 8.40 மீட்டர் தாண்டினார். முரளி ஸ்ரீசங்கர் 8.37 மீட்டர் தாண்டி 2-வது இடத்தைப் பிடித்தார். சீன வீரர் மிங்குன் ஜாங் 3-வது இடத்தைப் பெற்றார்.
400 மீட்டர் ஆடவர் தடை ஓட்டத்தில் இந்திய வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான டி.சந்தோஷ் குமார் 3-வதாக வந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
0 Comments