மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) தொழிலாளர் நலத்துறையால் நடத்தப்பட்டு வருகிறது.
அரசு ஐடிஐ.க்களில் தற்போது ஃபிட்டர், டர்னர், மெசினிஸ்ட், எலக்ட்ரீசியன், வெல்டர், ஏசி மெக்கானிக் போன்ற 78 தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் பெறவேண்டும். இந்த நோக்கத்தில் தமிழக அரசு 71 அரசு ஐடிஐ.க்களை ரூ.2,877.43 கோடியில் 'தொழில் 4.0' தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த திட்டமிட்டது.
அதன்படி, 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 'தொழில் 4.0' தரத்திலான தொழில்நுட்ப மையங்களை உருவாக்க தமிழக அரசு, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
அதன் தொடர்ச்சியாக, 2-ம் கட்டமாக 45 அரசு ஐடிஐ.க்களில் ரூ.1,559.25 கோடி செலவில் 'தொழில் 4.0' தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். இதன்மூலம் அரசு ஐடிஐ.க்களில் ஆண்டுதோறும் 5,140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்படுவர்.
0 Comments