தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். அதில், மாணவர்கள் 4,55,017, மாணவிகள் 4,59,303 பேர் தேர்வு எழுதினர்.
அந்த தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 19ஆம் தேதி வெளியானது. அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
அதில், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66 சதவீதமாகவும், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16 சதவீதமாகவும் இருந்தது. மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்தது.
தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்பட்டன. தொடர்ந்து, தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வருகிற 18ஆம் தேதி முதல் அசல் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வருகிற 18ஆம் தேதி காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல், தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை அவரக்ள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மாணவர்களின் சான்றிதழ் அச்சிடுதல் பணி, சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு, மாவட்ட தேர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் வாயிலாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பள்ளிகள் வாயிலாக மாணவர்கள் பெற்று, மேற்படிப்புகளில் சேர அவற்றைப் பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments