ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான போல்வால்ட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நினா கென்னடியும், நடப்பு சாம்பியனும் ஒலிம்பிக் சாம்பியனுமான அமெரிக்காவின் கேட்டி மூனும் தலா 4.90 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்தனர். இதன் பின்னர் இருவருமே சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டனர். பின்லாந்தின் வில்மா முர்டோ 4.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்தின் ஜோஷ் கெர் தங்கப் பதக்கம் வென்றார். அவர், பந்தய தூரத்தை 3 நிமிடம் 29.38 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். நார்வே நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் இங்பிரிக்ட்சன் (3:29.65) வெள்ளிப் பதக்கமும், நர்வே கில்ஜே நோர்தாஸ் (3:29.68) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் நார்வே வீரர் கார்ஸ்டன் வார்ஹோம் பந்தய தூரத்தை 46.89 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் கார்ஸ்டன் வார்ஹோம் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளைச் சேர்ந்த கைரோன் மெக்மாஸ்டர் 47.34 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் ராய் பெஞ்ஜமின் 47.56 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் டொமினிகாவின் மரிலிடி பாலினோ தங்கப் பதக்கம் வென்றார்.அவர், பந்தய தூரத்தை 48.76 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். போலந்தின் நடாலியா காஸ்மரேக், இலக்கை 49.57 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும், பார்படாஸின் சடா வில்லியம்ஸ் 49.60 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
Lமகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் இந்தியாவின் பருல் சவுத்ரி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தகுதி சுற்றில் ஹீட் 2-ல் இடம் பெற்ற அவர், இலக்கை 9:24.29 விநாடிகளில் அடைந்தார். இதன் மூலம் ஸ்டீபிள்சேஸில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் பருல் சவுத்ரி. இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் லலிதா பாபர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். எனினும் அவர், இறுதிப் போட்டியில் 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
0 Comments