ஆன்லைன் எனப்படும் இணைய வழியாக, நாடு முழுதும் ஏராளமான சூதாட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இவற்றை கண்காணிக்கவும், முறையாக பதிவு செய்யவும், இந்த விளையாட்டுகளை ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரம்பிற்குள் கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்தது.
இதுதவிர, அரங்குகளில் நடக்கும் கேசினோக்கள் மற்றும் குதிரை பந்தயங்கள் ஆகியவற்றையும் ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதையடுத்து, அந்த விளையாட்டுகளுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விளையாட்டுகளுக்கான ஜி.எஸ்.டி.,யை, 28 சதவீதமாக அதிகரிக்க, மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய குழு பரிந்துரைத்தது.
இதற்கு, கோவா, சிக்கிம், புதுடில்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இதை நடைமுறைப்படுத்துவதில் ஒருமித்த கருத்தை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, மாநில நிதி அமைச்சர்கள் குழு, மீண்டும் இதை ஆய்வு செய்து, 28 சதவீத வரி விதிக்கும்படி, ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு மீண்டும் பரிந்துரை செய்தது.
இதையடுத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பார்லிமென்டின் இரு சபைகளிலும், 'மத்திய ஜி.எஸ்.டி., சட்ட திருத்த மசோதா 2023, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., சட்ட திருத்த மசோதா 2023' ஆகிய மசோதாக்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்தார்.
இதையடுத்து, இரு சபைகளிலும் நேற்று இந்த மசோதாக்கள், விவாதம் இன்றி நிறைவேறின.
0 Comments