நிலவில் வெற்றிகரமாக இறங்கியது சந்திரயான் 3 - தென்துருவத்தை சென்றடைந்த முதல் நாடு எனும் புதிய சரித்திரம் / Chandrayaan 3 successfully lands on the moon - making new history as the first country to reach the South Pole
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.250 கோடியில் வடிவமைத்தது. இது 3,895 கிலோ எடை கொண்டது.
ஏற்கனவே சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவை சுற்றிவருவதால் இம்முறை விண்கலத்தில் லேண்டர், ரோவர் பாகங்கள் மட்டும் இடம்பெற்றன.
சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 16 நிமிடங்களில் திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலத்தை எல்விஎம்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அனைத்துகட்ட முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டு சந்திரயான்-3 நேற்று மாலை நிலவில் தரையிறங்க தயாரானது. அதற்கான பணிகள் மாலை 5.44 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு மையத்தில் இருந்து நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நிலவில் இருந்து 25 கி.மீ. உயரத்துக்கு வந்தபோது, லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கணினி வாயிலாக தரையிறங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது லேண்டரின் வேகம் மணிக்கு 6,000 கி.மீ. என்ற அளவில் இருந்தது.
எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி அதன் வேகத்தை குறைக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்காக லேண்டரின் கால்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 4 திரவ இயந்திரங்களும் சீரான நிலையில் சுமார் 10 நிமிடங்கள் இயக்கப்பட்டன. அதன்மூலம் விண்கலத்தின் வேகத்தை 1,200 கி.மீ அளவுக்கு குறைத்து லேண்டர் 7.4 கி.மீ உயரத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு தரையில் இருந்து 800 மீட்டர் உயரத்தை வந்தடைந்ததும், அதுவரை சாய்ந்தவாறு இருந்த விண்கலத்தின் கால்கள் தரையிறங்குவதற்கு ஏதுவாக செங்குத்தாக கீழ்நோக்கி நேராக திருப்பப்பட்டது.
அதேநேரம், லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு கணினி, விண்கலத்தில் உள்ள கேமரா மூலம் நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து சரியான இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையை உறுதிசெய்தது.
அதன்பின் அந்தப் பாதையில் பயணத்தை தொடர்ந்த லேண்டர் தனது திரவ இயந்திரங்களின் விசையை குறைத்து 150 மீட்டர் உயரத்துக்கு வந்தது. இந்த கட்டத்துக்கு வந்ததும் லேண்டர் அப்படியே சில விநாடிகள் நிறுத்திவைக்கப்பட்டது.
அப்போது நிலவின் ஈர்ப்பு விசையால் லேண்டர் கீழே இழுக்கப்படாமல் இருக்க அதன் கால்களில் உள்ள இயந்திரங்கள் மூலம் மேல்நோக்கிய தள்ளுவிசை கொடுக்கப்பட்டது.
இந்த சூழலில், விண்கலத்தில் இருந்த 'இடர் உணர் ஆபத்து தவிர்ப்பு கேமரா' உதவியால், தரையிறங்க வேண்டிய பகுதியை ஆராய்ந்து, அதில் பாதுகாப்பான ஒரு சமதள பரப்பு தேர்வு செய்யப்பட்டது. அதன்பின் 150 மீட்டரில் இருந்து 60 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் இறக்கப்பட்டது.
அதில் இருந்த லேசர் டாப்ளர் வெலாசிட்டி சென்சார் வாயிலாக விண்கலம் எவ்வளவு வேகத்தில் கீழ்நோக்கிச் செல்கிறது என்பதையும் கணக்கிட்டு தரையிறங்க ஏதுவான வேகமும் கட்டுக்குள் வைக்கப்பட்டது.
அடுத்ததாக லேண்டர் 10 மீட்டர் உயரத்துக்கு கொண்டு வரப்பட்டதும், நிலவின் மேற்பரப்பில் இருந்து புழுதி மேல் எழும்புவதை தவிர்க்க, திரவ இயந்திரங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது.
மிகவும் பரபரப்பான அபாயக் கட்டத்தை கடந்து, மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்துக்கு அருகே மான்சினஸ் சி மற்றும் போகுஸ்லாவ்ஸ்கி பள்ளங்களுக்கு இடையே லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு மற்றும் தென் துருவத்துக்கு சென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று புதிய சகாப்தம் படைத்துள்ளது.
0 Comments