தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் 4 தேர்வு) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், கள உதவியாளர், வரித் தண்டலர், பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வானது கடந்த மாதம் 20ம் தேதி முதல் கடந்த 10ம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் 5364 இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், கள உதவியாளர் பணியிடங்களும் மற்றும் 425 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
மேலும், மீதமுள்ள 47 காலிப்பணியிடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தகுதி வாய்ந்த தேர்வர்களைக் கொண்டு நிரப்பப்படும். மேலும், குரூப் 4 பதவியில் அடங்கிய 3373 தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 21ம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து 1079 சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு அடுத்த மாதம் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை வரை நடைபெறும்.
தேர்வாணைய அலுவலகத்தில் போதிய இடவசதி இன்மையால் இந்த நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்கள் தங்களுடன் இளம் சிறார்கள், பெண்கள் மற்றும் முதியோர் ஆகியோர்களை உடன் அழைத்து வருவதினை தவிர்க்க வேண்டும்.
தேர்வாணைய அலுவலகத்தின் எதிரே ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க தேர்வாணையத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
0 Comments