பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து 'பிரிக்' கூட்டமைப்பை 2006-ஆம் ஆண்டில் நிறுவின. அக்கூட்டமைப்பில் 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா இணைக்கப்பட்டவுடன், 'பிரிக்ஸ்' என மாறியது.
வளா்ந்து வரும் பொருளாதார சக்திகள் இணைந்து உருவாக்கிய முக்கிய பன்னாட்டு கூட்டமைப்பாக பிரிக்ஸ் திகழ்ந்து வருகிறது. முக்கியமாக, அக்கூட்டமைப்பு சாா்பில் உருவாக்கப்பட்ட நியூ டெவலெப்மென்ட் வங்கியானது பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.
ஆண்டுதோறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு, சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்பட்டு வருகிறது.
கரோனா தொற்று பரவல் காலத்தில்கூட கூட்டமைப்பின் மாநாடுகள் காணொலி வாயிலாக நடைபெற்றன. பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்கில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. அதில் புதிய உறுப்பினா்களைக் கூட்டமைப்பில் இணைப்பது தொடா்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரிக்ஸ் மாநாடு வியாழக்கிழமை நிறைவடைந்தது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 நாடுகளைப் புதிய உறுப்பினா்களாக இணைத்துக் கொள்ள மாநாட்டில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, ஆா்ஜென்டீனா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அதிகாரபூா்வமாக இணையவுள்ளன.
0 Comments