டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை துணை நிலை ஆளுநரே நியமிக்க வழிவகுக்கும், டெல்லி உயரதிகாரிகள் நியமன அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இச்சட்ட மசோதா கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் டெல்லி நிர்வாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இச்சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், டெல்லியில் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதை இலக்காகக் கொண்டே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறினார்.
மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவானதால், இம்மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இதையடுத்து, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் மற்றும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளின் டெல்லி அவசர சட்ட மசோதாவிற்கு ஆதரவு அளித்தன. சுமார் 8 மணிநேர விவாதத்துக்கு பின் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.
0 Comments