இணையதளங்கள், செயலிகள் போன்ற டிஜிட்டல் தளங்களில் தனிநபர்களின் தகவல்களை பாதுகாப்பதாகக் கூறி மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு Personal Data Protection Bill எனப்படும் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை அறிமுகம் செய்தது.
இந்த மசோதாவில் இடம்பெற்ற அம்சங்கள் தனிநபர் தகவல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எதிராகவும், கருத்து சுதந்திரத்துக்கு எதிராகவும் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
தனிநபர்களின் தகவல்களை தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூக வலைதள நிறுவனங்கள் எப்படி கையாள வேண்டும் என்ற வரையறைகளை அந்த மசோதாவில் மத்திய அரசு முன்வைத்தது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், தனிநபர்களின் தகவல்களை அரசு கண்காணிக்க வழிவகுக்கும் என்றும் அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்க்கட்சிகள் இம்மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதையடுத்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பார்வைக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இந்த மசோதாவில் நாடாளுமன்ற கூட்டுக் குழு 81 திருத்தங்களையும் 12 பரிந்துரைகளையும் முன்வைத்த நிலையில் இந்த மசோதாவை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற்றது.
பின்னர் மசோதா மேம்படுத்தப்பட்டு, கடந்த ஜூலை 5ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, இந்த மசோதா ஆகஸ்ட் 3ஆம் தேதி மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார்.
மசோதா மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் எழுப்பிய தொடர் முழக்கங்களுக்கு இடையே லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
டிஜிட்டல் தளங்களில் சட்டத்திற்குட்பட்டு தனிநபர் தகவல்களை பயன்படுத்த அனுமதி அளிக்கவும் அதே நேரத்தில் தனிநபரின் தரவுகள் மீதான அவரது உரிமையை அங்கீகரிக்கும் வகையில் டிஜிட்டல் தனிநபர் பாதுகாப்பு மசோதா அமைந்துள்ளது.
தனிநபர் ஒருவரின் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் சுமார் 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க இடமளிக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டு உள்ளது.
சமூக வலைத்தளங்களில் தனிநபர் ஒருவர் தனது கணக்கை நீக்கினால், சம்பந்தப்பட்ட நிறுவனமும் அந்த நபரின் தகவல்களை முழுமையாக நீக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
அதே போன்று தனியார் நிறுவனங்கள் வருகைப் பதிவுக்காக ஊழியரின் கைரேகை போன்ற பயோமெட்ரிக் தரவுகளை சேகரித்தால் அதற்காக ஊழியரின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும் என்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து ராஜ்யசபாவிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நேரத்தில் ராஜ்யசபாவில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
0 Comments