ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. 2-ம் நாள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஆடவர் லைட்வெயிட் இரட்டையர் துடுப்புப் படகுப் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் லால் ஜாட், அரவிந்த் சிங் ஜோடி 2-வதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தப் பிரிவில் சீனாவின் ஜுன்ஜி ஃபேன், மான் சுன் ஜோடி தங்கமும், உஸ்பெகிஸ்தானின் ஷாக்சோத் நுர்மடோவ், சோபிர்ஜான் சபரோலியேவ் ஜோடி வெண்கலமும் கைப்பற்றியது.
8 பேர் பங்கேற்கும் துடுப்புப் படகுப் போட்டியில் நீரஜ், நரேஷ்க் கல்வானியா, நீத்திஷ் குமார், சரண்ஜீத் சிங், ஜஸ்விந்தர் சிங், பீம்சிங், புனீத் குமார், ஆசிஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2-வது இடம்பிடித்து வெள்ளியைக் கைப்பற்றியது.
காக்ஸ்லெஸ் ஜோடி பிரிவில் இந்தியாவின் பாபுலால் யாதவ், லேக் ராம் ஜோடி 3-வது இடம் பிடித்து வெண்கலத்தைத் தட்டிச் சென்றது. இதன்மூலம் துடுப்புப் படகுப் போட்டியில் மட்டும் 3 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.
துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவில் இந்தியாவின் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்சி ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவிலும், அணிப் பிரிவிலும் 19 வயதான இந்திய வீராங்கனை ரமிதா பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 2-ம் நாள் முடிவில், இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
0 Comments