Recent Post

6/recent/ticker-posts

ஆசிய விளையாட்டு போட்டி - 5ஆம் நாள் / Asian Games - Day 5

சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டுத் திருவிழா களைகட்டி வருகிறது. இதன், 5ம் நாளான வியாழக்கிழமை ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன.

துப்பாக்கி சுடுதலில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர் அணியின் சார்பில் சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா மற்றும் ஷிவ நர்வால் ஆகியோர் களம் கண்டனர். இவர்கள், போட்டியின் போது இலக்கை நோக்கி துல்லியமாக சுட்டு புள்ளிகளை குவித்ததுடன், சக போட்டியாளர்களுக்கு கடும் சவால் அளித்தனர். 

தொடர்ந்து நேர்த்தியாக செயல்பட்ட இந்திய ஆடவர் அணி மொத்தம் 1734 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. இதன் மூலம் ஹாங்சோ அரங்கில் மூவர்ணக் கொடி உயரே பறந்ததுடன் தேசிய கீதமும் ஒலித்தது.

இதே பிரிவில், சீன அணி வெள்ளிப் பதக்கமும், வியட்னாம் அணி வெண்கலப் பதக்கத்தையும் வசப்படுத்தின. ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் ஜொலித்ததன் வாயிலாக நடப்பு ஆசிய போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மட்டும் இந்தியாவிற்கு நான்காவது தங்கம் கிடைத்துள்ளது.

வுசூ விளையாட்டின் மகளிர் 60 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா, சீனாவின் ஜியேவெய் உடன் பலப்பரீட்சை நடத்தினார். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சற்று சறுக்கலை சந்தித்த ரோஷிபினா நூலிழையில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். இப்போட்டியில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தனது கழுத்தில் ஏந்தினார். 

மேலும், வுசூ விளையாட்டில் அருணாச்சல பிரதேச வீராங்கனைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதே பிரிவில் ரோஷிபினா பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆசிய போட்டியின் குதிரையேற்றத்தில் இந்தியாவிற்கு மீண்டும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. டிரெஸ்சேஜ் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அனுஷ் அகர்வால் 73 புள்ளிகள் எடுத்து மூன்றாம் இடம் பிடித்தார். இதன் மூலம் வெண்கல பதக்கத்தை வசப்படுத்தி கவனம் ஈர்த்தார்.

இதனிடையே, டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழ்நாட்டு வீரர்களான சரத் கமல் மற்றும் சத்யன் ஆகியோர் தனிநபர் மற்றும் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஐந்தாம் நாள் மட்டும் இந்திய அணி, தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளி உட்பட 3 பதக்கங்களை வென்றன. மேலும், ஒட்டு மொத்தமாக இந்தியா 6 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என 25 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel