ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 12வது நாளான இன்று, ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் ஓஜாஸ் பிரவீன், அபிஷேக் வர்மா, பிரதமேஷ் சமாதான் ஆகிய மூவரும் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கத்தை வென்று தந்துள்ளனர்.
அதேபோல ஸ்குவாஷ், கலப்பு அணியில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஹரிந்தர் பால் சிங் தங்கம் வென்றுள்ளனர். இந்தியாவுக்கு இது இரண்டாவது தங்கமாகும். அதற்கு முன்னதாக ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த் சுவாமி, பிரனீத் கவுர் ஆகிய மூவரும் வில்வித்தையின் கலப்பு சுற்றில் தங்கப் பதக்கம் வென்றனர்.
மறுபுறம், பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் மலேசியாவின் லி ஜி ஜியாவை வீழ்த்தி ஹெச்.எஸ்.பிரணாய் இறுதி போட்டியில் நுழைந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 தொடரில் பாட்மிண்டனில் அரையிறுதியில் தோல்வியடையும் வீரர்கள் இருவருக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படுகிறது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இந்தியா 83 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 20 தங்கம் அடங்கும். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 தங்கம் உட்பட 70 பதக்கங்களை வென்றது தான் அதிகமான எண்ணிக்கையாக இருந்தது. இந்தமுறை அனைத்து சாதனைகளையும் முறியடித்து இந்தியா அதிக பதக்கங்களை குவித்து வருகிறது.
0 Comments