ஷீரடி விமான நிலைய மற்றொரு முனையத்தின் நிலுவையில் உள்ள பணிகளை மேற்கொள்ள மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.1,200 கோடியை ஒதுக்கீடு செய்த தீர்மானத்தை மகாராஷ்டிர அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
முந்தைய பணிகளுக்காக ரூ.364 கோடியும், மற்றொரு முனையத்தின் மேம்பாட்டு பணிகள் மற்றும் ஷீரடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.876 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை மாநில தலைமைச் செயலாளர் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்திற்கு முதல்வர் மற்றும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஷீரடி விமான நிலையமானது தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் திருப்பதி போன்ற அனைத்து முக்கிய நகரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்துக்கு ஒவ்வொரு மாதமும் 64,000 பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் பயணிகள் பெரும்பாலானவர்கள் சாய்பாபா பக்தர்கள் ஆவர். மேலும், இந்த விமான நிலையத்தில் விவசாய மற்றும் ஏனைய பொருள்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் நடைபெறுகிறது.
விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளை அழகுபடுத்துதல், நுழைவு வாயில் அமைத்தல், ஓடுபாதை புனரமைப்பு, விமான நிலையத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் மற்றும் பயிற்சி மையம் தவிர, பாதுகாப்புப் பணியாளர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு இந்த தொகை செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய முனையம் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். இதில் அனைத்து நவீன வசதிகளும் இருக்கும். தரைதளத்தில் சோதனை கூடம், பயணிகள் சோதனை பகுதி, தொலைதூரத்தில் இருந்து கண்காணிக்கும் வசதி மற்றும் பொருள்களை கையாளும் அமைப்பு போன்ற வசதிகள் அமைக்கப்படும்.
0 Comments