சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 141வது ஆண்டு மாநாடு மும்பையில் உள்ள நிடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநட்டை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்க உள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மாநாடு இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு பின்னர், நிடா அம்பானியின் தீவிர முயற்சியால் நடைபெற உள்ளது. கடைசியாக இம்மாநாடு, 1983- ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்றது.
மும்பையில் நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் சங்க கூட்டத்தில் 2030 மற்றும் 2034 ஆம் ஆண்டுகளில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடுகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
வியாழக்கிழுமை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், சர்வதேச தடகள கூட்டமைப்பின் தலைவர் செப் கோ, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும், ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினருமான நீடா அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் தாமஸ் பாக், ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தி வரும் நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டார்.
இச்சூழ்நிலையில் ஒலிம்பிக் சங்கத்தின் இரண்டாவது நாள் செயற்குழுக் கூட்டம் மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தியாவில் நடைபெற உள்ள இந்த பிரமாண்ட மாநாட்டில், 99 வாக்களிக்கும் உறுப்பினர்களும் 43 கௌரவ உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்.
மேலும் உலகம் முழுவதிலும் உள்ள 600 முக்கியஸ்தர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் 50 க்கும் மேற்பட்ட விளையாட்டுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் பங்கேற்கும்.
இதில் மல்யுத்தம், கூடைப்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன் தடகளம் மற்றும் பல விளையாட்டுக் கூட்டமைப்புகளின் தலைவர்களும் அடங்குவர். கத்தார், ஜோர்டான், மொனாக்கோ, லக்சம்பர்க், பூடான், பிரிட்டன் மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளின் அரச தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
வரும் 15 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில், ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
0 Comments