காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
193 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில், 120 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. கனடா, இங்கிலாந்து, இத்தாலி, இந்தியா, ஜெர்மனி மற்றும் உக்ரைன் உள்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்த தீர்மானத்தில், உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், காஸா பகுதிக்குள் அத்தியாவசிய பொருள்கள் சேவைகளை தொடர்ந்து தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு மற்றும் சிகிச்சை கோரும், சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மக்களையும், உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இந்த மாதம் மோதல் தொடங்கியிலிருந்து இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
காஸாவில் கடந்த 20 நாள்களாக இஸ்ரேல் நடத்தி வரும் சரமாரி தாக்குதலில் இதுவரை 7,326 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியது.
மேலும், மேற்குக் கரையில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்கள், இஸ்ரேல் வீரா்களுடன் மோதலில் ஈடுபட்டவா்கள் என 110 போ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.
0 Comments