ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதலாவது ஆளில்லா டிவி-டி1 ராக்கெட் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.
இதற்கான 13 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. மோசமான வானிலை காரணமாக காலை 8 மணிக்குப் பதிலாக காலை 8.30 மணிக்கு மாதிரி விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.
ஆனால், வானிலை சீராகாததால் 15 நிமிடம் தாமதமாக காலை 8 45 மணிக்கு இறுதிகட்ட கவுன்ட்டவுன் தொடங்கியது. கவுன்ட்டவுன் நிறைவடைய 5 விநாடிகள் இருந்தபோது திடீரென மிஷன் நிறுத்தப்பட்டது.
கடைசி நேரத்தில் என்ஜினின் எரியூட்டம் நிகழ்வு இயல்பாக இல்லாததால் டிவி-டி1 ராக்கெட்டில் உள்ள கணினி ஏவுதலை தானாக நிறுத்திவிட்டதாகவும், அதில் நடந்த கோளாறு என்ன என்பது கண்டறியப்பட்டு சரி செய்த பின்னர் விரைவில் விண்கலம் ஏவப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சோமநாத் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக ராக்கெட்டில் ஏற்பட்ட பிரச்னையை இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்த சில நிமிடங்களில் கண்டறிந்து சரி செய்தனர். காலை 10 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்தது. அதன்படி சரியாக காலை 10 மணியளவில் Crew escape system அமைப்புடன் ககன்யான் திட்டத்திற்கான ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
16 புள்ளி 6 கிலோமீட்டர் தூரம் பயணித்ததும் விண்வெளி வீரர்கள் அமரக் கூடிய கலன் பகுதி ராக்கெட்டில் இருந்து தனியாக பிரிந்து சோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் பாராசூட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வங்ககடலில் இறக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், வங்கக் கடலில் பாதுகாப்பாக தரையிறங்கிய விண்வெளி வீரர்கள் அமரக் கூடிய கலன் பகுதி கடற்படையால் மீட்கப்பட்டது.
0 Comments