மேற்கத்திய நாடுகளை போல் இந்தியாவில் ஓரினச் சேர்க்கை குற்றமில்ல என கடந்த 2018 ஆம் ஆண்டு முன் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே நேரம் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு சட்டத்தில் இடமில்லாத நிலை இருந்தது.
ஆனால், அவ்வப்போது ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் இந்தியாவிலும் ஓரினச் சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கை LGBTQ சமூகத்தினர் இடையே வலுத்து வந்தது.
இந்த நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பலரால் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இதில் மத்திய அரசு ஒருபாலின திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடந்த மே மாதம் 11 ஆம் தேதி விசாரணை நிறைவடைந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளார்கள். ஓரினச்சேர்க்கையை நகர்புற வாழ்வியலோடு இணைந்தது என மத்திய அரசு தெரிவித்த கருத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சந்திரசூட், திருமணம் நிலையான கட்டமைப்பு என்பதையும் மறுத்தார்.
திருமண சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, அவற்றை சட்டப்படியே கொண்டு வர முடியும் என தெரிவித்தார்.
சிறப்பு திருமண சட்டம் ரத்தானால் விடுதலைக்கு முந்தைய காலத்துக்கு நாட்டை கொண்டு செல்வதாகும் எனக் கூறிய அவர், தன்பாலின திருமண விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற மத்திய அரசின் வாதம் நிராகரிக்கப்படுவதாக தெரிவித்தார். ஓரின சேர்க்கையாளார்கள் சமூகத்தில் அமைதியாக வாழவும், யாரோடு சேர்ந்த வாழ வேண்டும் என்ற சுதந்திரமும் இருப்பதாக கூறினார்.
இதற்கு மாறுபட்டு நீதிபதி கவுல், நீதிபதி பட், நீதிபதி நரசிம்மா ஆகியோரும் தீர்ப்பு அளித்து இருக்கிறார்கள். நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பின் காரணமாக உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கவில்லை.
அதே நேரம் இந்தியாவில் ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்து இருப்பதால் LGBTQ சமூகத்தினரின் உரிமைகளை அரசுகள் பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்ற அறிவுறுத்தி உள்ளது.
0 Comments