இலங்கை உள்நாட்டுப் போரின்போது உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் 50 ஆயிரம்வீடுகளை கட்டித்தர முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வந்தது.
இவற்றில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46 ஆயிரம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டன. மேலும், தேயிலைத் தோட்டத் தமிழர்கள் வாழும் மலையகப் பகுதிகளில் 3,700 வீடுகள் கட்டித் தரப்பட்டன.
இலங்கையில் 2017-ல் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் மலையகப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அப்போது, 'மலையக மக்களின் கல்வி,சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக இலங்கை அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு, இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்.
மலையகத் தமிழர்களுக்காக இந்திய அரசுத் தரப்பில் 4,000 வீடுகள் கட்டும் திட்டத்துடன், கூடுதலாக 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும்' என்று மோடி அறிவித்தார்.
இந்நிலையில், மலையக மக்கள்தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் 'நாம் 200' என்ற தலைப்பிலான மாநாடு கொழும்புவில் மாலை நடைபெற்றது.
இதில், கொட்டக்கலை பகுதியில் அமைந்துள்ள மவுன்ட் வெர்மன் தேயிலைத் தோட்டத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் 10,000 வீடுகள் கட்டும் திட்டத்துக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவும், மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனும் இணைந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினர்.
அதிபர் மாளிகையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு நடந்தது. இதில், இந்தியா-இலங்கை இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியிலான பவுத்ததொடர்புகளை பலப்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி இந்தியா சார்பாக வழங்கப்பட்டது.
மேலும், திரிகோணமலையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையை தொடங்கிவைத்த நிர்மலா சீதாராமன், திருக்கோணஸ்வரம் சிவன்கோயில், யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
0 Comments