லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சர்க்கரை அமைப்பின் (ஐ.எஸ்.ஓ) 63-வது கவுன்சில் கூட்டத்தில், 2024ம் ஆண்டிற்கான இந்த அமைப்பின் தலைவராக இந்தியா தேர்வுசெய்யப்பட்டது.
உலக அளவில் சர்க்கரைத் துறையை வழிநடத்துவதில் நாட்டிற்கு இது ஒரு பெரிய கௌரவமாகும். மேலும் இந்த துறையில் நாட்டின் முன்னேற்றத்தை இந்த தலைமைத்துவம் பிரதிபலிக்கிறது.
உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகளாவிய சர்க்கரை நுகர்வில் சுமார் 15 சதவீதத்தையும் உலகளாவிய சர்க்கரை உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தையும் இந்தியா கொண்டுள்ளது.
சுமார் 90 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட சர்க்கரை தொடர்பான உச்ச சர்வதேச அமைப்பான ஐ.எஸ்.ஓவை வழிநடத்துவது இந்தியாவுக்கு பொருத்தமானதாக அமையும்.
அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பிறகு எத்தனால் உற்பத்தியில் உலகின் 3-வது பெரிய நாடாக உள்ளது. இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு சதவீதம் 2019-20 ஆம் ஆண்டில் 5 சதவீதத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எத்தனால் உற்பத்தி 173 கோடி லிட்டரிலிருந்து 500 கோடி லிட்டருக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.
விவசாயிகளுக்கு அதிக கரும்பு விலையை வழங்கும் நாடு என்ற தனிச்சிறப்பு இந்தியாவிற்கு உண்டு. அரசுக்கும் சர்க்கரைத் தொழில்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு இந்திய சர்க்கரைத் தொழில்துறைக்கு புத்துயிர் அளித்துள்ளது. கடந்த 2022-23 ஆம் ஆண்டின் கரும்பு நிலுவைத் தொகை 98% க்கும் அதிகமானவை ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளன.
0 Comments