பீகார் மாநில அமைச்சரவை செவ்வாய்க்கிழமை மாலை 60 சதவீத இடஒதுக்கீட்டை (பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீதம் உட்பட) 75 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த இடஒதுக்கீடு மசோதா தற்போது நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், மாதம் ரூ. 6,000க்கும் குறைவான வருமானம் உள்ள 94 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் ஐந்தாண்டுகளுக்கு வழங்கவும், 67 லட்சம் நிலமற்ற குடும்பங்களுக்கு ஒரு முறை ரூ.1 லட்சம் வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால், மாநில அரசின் கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.50,000 கோடி கூடுதல் சுமை ஏற்பட உள்ளது.
முன்மொழியப்பட்ட இடஒதுக்கீடு மசோதா, தற்போதுள்ள 10 சதவீத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஒதுக்கீட்டைத் தவிர, ஓ.பி.சிகளுக்கு 18 சதவீத இடஒதுக்கீட்டையும், ஈ.பி.சிகளுக்கு 25 சதவீதத்தையும், பட்டியலிட்ட சாதி பிரிவினருக்கு (எஸ்.சி) 20 சதவீதத்தையும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு (எஸ்.சி) 2 சதவீதத்தையும் வழங்க வாய்ப்புள்ளது.
பீகார் மாநிலங்களில் தற்போது 50 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழக்கத்தில் உள்ள நிலையில், அதில், எஸ்.சி-க்கு 14 சதவீதம், எஸ்.டி-க்கு 10 சதவீதம், ஈ.பி.சி-க்கு 12 சதவீதம், ஓ.பி.சி-க்கு 8 சதவீதம், பெண்கள் மற்றும் பொது பிரிவில் உள்ள ஏழைகளுக்கு தலா 3 சதவீதம் வழங்கப்படுகிறது. அதனுடன் 10 சதவீத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஒதுக்கீட்டை சேர்த்தால், தற்போதைய ஒதுக்கீடு 60 சதவீதமாக வருகிறது.
சுமார் 13 கோடி பீகார் மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் ஏழைகள் (ஒரு நாளைக்கு ரூ.200 அல்லது ஒரு மாதத்தில் ரூ.6,000க்கு குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள்) என்று கணக்கெடுப்பு அறிக்கை காட்டுகிறது.
0 Comments