18 முக்கிய சந்தைகளுக்கான இந்திய பொறியியல் துறையின் ஏற்றுமதி, நடப்பாண்டு அக்டோபரில் நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக, இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு (இஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான பொறியியல் துறை ஏற்றுமதி, கடந்த ஆண்டு அக்டோபரில் 1361 மில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், 2.2 சதவிகிதம் உயர்ந்து, 1391.5 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
ஜெர்மனிக்கான பொறியியல் ஏற்றுமதி, அக்டோபரில் 20 சதவிகிதம் உயர்ந்து 342.7 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பொறியியல் ஏற்றுமதி, 2.9 சதவிகிதம் உயர்ந்து 348.6 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த பொறியியல் ஏற்றுமதி, கடந்த ஆண்டு அக்டோபரில் 7550.69 மில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், 7.2 சதவிகிதம் உயர்ந்து, நடப்பாண்டு அக்டோபரில் 8094.20 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
அதே வேளையில், ஒட்டுமொத்த பொறியியல் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், 62.63 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், நடப்பாண்டு அதே காலகட்டத்தில், 1.61 சதவிகிதம் குறைந்து 61.63 பில்லியன் டாலர்களாக சரிவை சந்தித்துள்ளது.
அக்டோபரில், நாட்டின் மொத்த வணிக ஏற்றுமதியில், இந்திய பொறியியல் துறையின் பங்கு 24.11 சதவிகிதம் என்று இஇபிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
0 Comments