“இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த கடற்படையின் கப்பல்கள் கினியா வளைகுடாவில் கூட்டுக் கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டன. இந்தப் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் இது மேற்கொள்ளப்பட்டது.
பிரஸ்ஸல்ஸில் 2023 அக்டோபர் 5 அன்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா கடல்சார் பாதுகாப்பு உரையாடலின் மூன்றாவது கூட்டத்தைத் தொடர்ந்து இந்த கூட்டுப் பயிற்சி நடைபெற்றது. அதன்படி, கினியா வளைகுடாவில் அக்டோபர் 24 அன்று இந்த கூட்டு கடற்படை பயிற்சி தொடங்கியது.
பயிற்சியின் போது, இந்திய கடற்படையின் கடலோர ரோந்து கப்பல் ஐ.என்.எஸ் சுமேதா, கினியா வளைகுடாவில் மூன்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் கப்பல்களுடன் இணைந்து பணியாற்றியது.
அதாவது இத்தாலிய கடற்படை கப்பல் ஐ.டி.எஸ் ஃபோஸ்காரி, பிரான்ஸ் கடற்படை கப்பலான எஃப்.எஸ் வென்டோஸ் மற்றும் ஸ்பெயின் கடற்படை கப்பல் டோர்னாடோ ஆகிய நான்கு கப்பல்களும், கியானா கடற்கரையில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டன.
அப்போது, கப்பலில் ஏறுவது, கப்பல்களுக்கு இடையே பணியாளர்களை மாற்றுவது ஆகியவற்றோடு, பிரான்ஸ் கப்பல் வென்டோஸ் மற்றும் இந்திய கடற்படை கப்பல் சுமேதாவில் இருந்து புறப்பட்ட, ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி பறக்கும் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் கினியா வளைகுடாவில் 31 நாட்கள் இந்த ரோந்துப் பணி நடைபெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் கினியா வளைகுடாவில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடலோர நாடுகள் மற்றும் யாவுண்டே கடல்பகுதி பாதுகாப்பை ஆதரிப்பதில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகின்றன.
0 Comments