மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் நடைபெற்று வந்த சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடரில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஜூனியர் அணி, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது.
இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி சார்பில் அருண் ஷஹானி 11-வது நிமிடத்திலும், 42-வது நிமிடத்தில் பூவன்னாவும், 52-வது நிமிடத்தில் உத்தம் சிங்கும் கோல் அடித்தனர்.
பாகிஸ்தான் அணி தரப்பில் சுஃப்யான் கான் (33-வது நிமிடம்), அப்துல் கயூம் (50-வது நிமிடம்), ஷாஹித் ஹன்னன் (57-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 5 வாய்ப்பில் இரு அணிகள் தரப்பிலும் தலா 4 கோல்கள் அடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 'சடன்டெத்' விதி முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் இந்திய அணி தரப்பில் விஷ்ணுகாந்த் சிங், அங்கத் பிர் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அர்ஷத் லியாகத் கோல் அடித்தார். அந்த அணியின் கேப்டன் ஷாஹித் ஹன்னனின் கோல் அடிக்கும் முயற்சியை இந்திய அணியின் கோல் கீப்பர் மோஹித் அற்புதமாக தடுத்தார்.
இதனால் இந்திய அணி 6-5 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது
0 Comments