பஞ்சாப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதாக மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக ஆம் ஆத்மி தலைமையிலான மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து, ‘கடந்த ஜூன் 19, 20 மற்றும் அக்.20-ஆகிய தேதிகளில் நடைபெற்ற பஞ்சாப் பேரவை அமா்வுகளின் செல்லுபடி குறித்து சந்தேகம் எழுப்ப ஆளுநருக்கு சட்ட அதிகாரம் இல்லை என்று நவம்பா் 10-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதன் 27 பக்கங்கள் கொண்ட விரிவான உத்தரவு உச்சநீதிமன்ற இணையதளத்தில் வியாழக்கிழமை இரவு பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், ‘பேரவை நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பும் எந்த முயற்சியும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஆகும்.
பேரவை சிறப்புரிமைகளின் பாதுகாவலராக அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பேரவைத் தலைவா், பேரவையை ஒத்திவைப்பதில் அவரது அதிகார வரம்புக்குள் சிறப்பாகச் செயல்பட்டாா்.
மாநில மக்களால் தோ்ந்தெடுக்கப்படாத காப்பாண்மைத் தலைவராக ஆளுநருக்கு சில அரசமைப்பு அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும், மாநில சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை நசுக்க ஆளுநா் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடாது’ என நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.
0 Comments