சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் இந்த சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சரணடைய 30 நாட்கள் அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், 30 நாட்கள் கால அவகாசத்துக்குள் சரணடையாவிட்டால், தண்டனையை அனுபவிக்கச் செய்வதற்கான நடைமுறைகளை விழுப்புரம் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவிகளை இழக்கிறார் என்பதால், அவர் அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த உயர்கல்வித்துறை இலாகாவானது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறையை கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார். அதனை உடனடியாக ஏற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அதேபோல, அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை, கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முதலமைச்சரின் பரிந்துரைக்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
0 Comments