மிசோரம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும், (டிச.3) காலை முதல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அதன்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது நிலவரப்படி, பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதியை வீழ்த்தி, காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
மத்தியப் பிரதேசம்
230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மைக்கு 116 தொகுதிகள் தேவை. அந்த வகையில், தற்போது பாஜக 165 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் 64 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மையை அடுத்து, அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால் அம்மாநிலத்தில், மீண்டும் பாஜக ஆட்சி அமைய இருப்பது உறுதியாகி உள்ளது. அம்மாநிலத்தில் தற்போது சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான்
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மைக்கு 100 தொகுதிகள் தேவை. அந்த வகையில், தற்போது பாஜக 117 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் 67 இடங்களில் உள்ளது. பெரும்பான்மையை அடுத்து, அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால், பாஜக ஆட்சியமைக்க இருக்கிறது.
சத்தீஸ்கர்
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில், ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவை. அந்த வகையில், தற்போது பாஜக 54 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் 36 இடங்களில் உள்ளது. பெரும்பான்மையை அடுத்து, அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால், பாஜக ஆட்சியமைக்க இருக்கிறது.
தெலங்கானா
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவிற்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பெரும்பான்மையாக 60 தொகுதிகள் தேவை.
அந்த வகையில், தற்போது காங்கிரஸ் 63 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) 40 இடங்களில் உள்ளது.
பெரும்பான்மையை அடுத்து, தெலங்கானாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால், அக்கட்சி முதன்முறையாக அங்கு ஆட்சியமைக்க இருக்கிறது.
0 Comments