ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு 2-ஆவது திருத்த மசோதா, யூனியன் பிரதேச அரசுகள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்களையும் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் அறிமுகம் செய்தாா். அமைச்சரின் பதிலைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் மாநிலப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான அரசமைப்புச் சட்டத்தின் 106-ஆவது திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடா்ந்து, இந்த மசோதா சட்டமானது.
இந்நிலையில், புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்களுக்கும் மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை நீட்டிக்கும் மசோதாக்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அரசமைப்புச் சட்டத்தின் 106-ஆவது திருத்தத்தின்படி, நாட்டில் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நடைபெறும் மக்களவை மற்றும் பேரவைத் தொகுதி மறுவரையறைக்குப் பிறகே மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், நாட்டில் மகளிா் இடஒதுக்கீடு அமலாக சற்று காலமெடுக்கும் என்று தெரிகிறது. இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகு 15 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதன்பின்னா், நாடாளுமன்ற முடிவுக்கேற்ப அது நீட்டிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments