ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் மறைவை அடுத்து 199 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி சபாநாயகராக அறிவிக்கப்பட்டார்.
தனது 56வது பிறந்தநாளான இன்று (டிச. 15) ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றார். முதல்முறை பாஜக எம்எல்ஏவான இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு பெற்றவர். எம்எல்ஏக்கள் தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா இருவரும் துணை முதல்வர்களாக பதவி ஏற்றனர்.
முதல்வர், துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இவ்விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments