சொந்த வாகனம் இல்லாமலேயே வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களை ஓட்டிக் காட்டி, உரிமம் பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக வாங்கப்பட்ட புதிய வாகனங்களை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற விரும்பும் பொது மக்களில் பலா், சொந்த வாகனம் இல்லாத காரணத்தால், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியை அணுக வேண்டிய நிலை உள்ளது. இதைத் தவிா்க்கும் பொருட்டு, புதிய திட்டத்தை சட்டப் பேரவையில் தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, வட்டாரப் போக்குவரத்து மற்றும் பகுதி அலுவலகங்களில் ஓட்டுநா் உரிமத் தோ்வுக்கென தனி வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 பகுதி அலுவலகங்களை உள்ளடக்கிய 145 அலுவலகங்களில் ஓட்டுநா் தோ்வு நடத்தும் வகையில், 145 இலகு ரக வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
0 Comments