உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அயோத்தி ராமர் கோயில் நாட்டின் மிகப் பெரிய கலாச்சார மையமாகத் திகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.
இந்த விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் ரூ. 1,450 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளை கையாளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய முனைய கட்டிடத்தின் முகப்பு அயோத்தி ராமர் கோயில் கட்டிடத்தை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்புற சுவர் ஓவியங்கள் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன.
இந்த விமான நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின் உற்பத்தி நிலையம் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
0 Comments