தெலங்கானாவில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றிபெற்று முதன்முறையாக, பி.ஆர்.எஸ்ஸிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.
டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ரேவந்த் ரெட்டியை முதல்வராக்க முடிவுசெய்தது காங்கிரஸ் தலைமை. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ரேவந்த் ரெட்டி முதல்வராகவும், அவரோடு 11 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்பார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, ஹைதராபாத்திலுள்ள எல்.பி ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா தொடங்கியது.
இதில் இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எம்.பி ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், பதவியேற்பு விழா தொடங்கியதும், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்துவைக்க, தெலங்கானாவில் காங்கிரஸின் முதல் முதலமைச்சராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி. அவரைத் தொடர்ந்து, மாநிலத்தின் துணை முதல்வராக மல்லு பாட்டி விக்ரமார்கா பதவியேற்றார்.
இவர்களோடு, உத்தம் குமார் ரெட்டி, கோமதிரெட்டி, வெங்கட் ரெட்டி, சீதக்கா, பொன்னம் பிரபாகர், ஸ்ரீதர் பாபு, தும்மல நாகேஷ்வர் ராவ், கொண்டா சுரேகா, ஜூபாலி, கிருஷ்ணா பொங்குலேட்டி ஆகிய 10 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். சபாநாயகராக, கதம் பிரசாத் குமாரை காங்கிரஸ் தேர்வுசெய்திருக்கிறது.
0 Comments