முதல்வர் ஸ்டாலின் 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாகவும், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி நீலகிரி மாவட்டத்திற்கென மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்புகளின்படி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும், அரசுப் போக்குவரத்து கழகங்களில் புதிய பேருந்துகளை இயக்கிடும் வகையிலும். 634.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 1666 பிஎஸ்4 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் முதற்கட்டமாக. விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, 40 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, 40 புதிய பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, 10 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, 5 புதிய பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, 5 புதிய பேருந்துகளும், என மொத்தம் 100 புதிய பிஎஸ்4 பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments