இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உற்பத்தியாகும் தனித்துவமான பொருட்களுக்கு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை புவிசார் குறியீடு வழங்கி வருகிறது.
இந்த அங்கீகாரமானது, அப்பொருளின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அப்பொருளை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது.
இந்நிலையில் ஒடிசாவின் லாஞ்சியா சவுரா பெயிண்டிங், டோங்கிரியா கோந்த் எம்பிராய்டரி சால்வை, கஜுரிகுடா (பனை வெல்லம்), தேன்கனல் மாஜி (உணவு), சிமிலி பால் காய் சட்னி (உணவு), நாயகர் கண்டேமுண்டி கத்தரிக்காய், கோராபுட் காலாஜீரா அரிசி ஆகிய 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ஒடிசா 25 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளதாக அம்மாநில அரசு தெரிவிக்கிறது.
லாஞ்சியா சவுரா பழங்குடி யினரின் கலை வடிவமே லாஞ்சியா சவுரா பெயிண்டிங் ஆகும். இதுபோல் டோங்கிரியா கோந்த் பழங்குடியினரால் தயாரிக்கப்படும் எம்பிராய்டரி சால்வை புகழ்பெற்றது.
கஜுரி குடா என்கிற பனை வெல்லம் கஜபதி மாவட்டத்தில் பேரீட்சையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தேன்கனல் மாஜி என்பது தேன்கனல் மாவட்டத்தின் புகழ்பெற்ற மற்றும் தனித்துவமான இனிப்பு பலகாரம் ஆகும்.
மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பழங்குடியினர் சாப்பிடும் ஒரு வகை சட்னியே சிமிலி பால் காய் சட்னி ஆகும். புரதம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள இந்த சட்னி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. கோராபுட் மாவட்டத்தில் பழங்குடியின விவசாயிகளால் காலாஜீரா அரிசி உற்பத்தி செய்யப் படுகிறது. இது மருத்துவ குணம் வாய்ந்தது.
கண்டேமுண்டி கத்தரிக்காய் என்பது ஒடிசாவின் நாயகர் மாவட்டத்தை சேர்ந்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பயிரிடப்படுகிறது. குறிப்பிட்ட பகுதியின் தனித்துவமான இந்தப் பொருட்களுக்கு மத்திய அரசு தற்போது புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
0 Comments