பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார்.
இரண்டாவது நாளான இன்று தூத்துக்குடியில் ரூ. 17,300 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு பெட்டக முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் வகையில் கட்டமைக்கப்பட இருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மையம் போன்ற பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கி வைத்தார்.
முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் உள்நாட்டு நீா்வழிக் கப்பலின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.
வாஞ்சி மணியாச்சி-நாகா்கோவில் ரயில் பாதை, வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம்-ஆரல்வாய்மொழி பிரிவு உள்பட இரட்டை ரயில் பாதை திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்தார். சுமாா் ரூ.1,477 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த இரட்டை ரயில் பாதை திட்டம், கன்னியாகுமரி, நாகா்கோவில் மற்றும் நெல்லையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்க உதவும்.
4 சாலைத் திட்டங்களையும் பிரதமா் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அா்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை 844-இல் ஜித்தண்டஹள்ளி-தருமபுரி இடையே நான்குவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 81-இல் மீன்சுருட்டி-சிதம்பரம் இடையே இருவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 83-இல் ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் இடையே நான்குவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 83-இல் நாகப்பட்டினம்-தஞ்சாவூா் இடையே இருவழிப் பாதை ஆகிய இந்தத் திட்டங்கள் சுமாா் ரூ.4,586 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வசதிகளையும் பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் சர்பானந்தா சோனோவால், எல்.முருகன், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வணக்கம் எனக்கூறி பிரதமர் தன் உரையை தொடங்கினார்.
0 Comments