நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது இடைக்கால பட்ஜெட் என்பதால் 56 நிமிடத்தில் அவர் உரையை முடித்து கொண்டார்.
இந்நிலையில் தான் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இது அவரது 6வது பட்ஜெட்டாகும். மொத்தம் 56 நிமிடம் வரை அவர் பட்ஜெட் உரையை வாசித்தார்.
இந்த சமயத்தில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி ஆனாலும் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதையும் அவர் செய்யவில்லை. வருமான வரி உச்சவரம்பில் பழைய நிலையை தொடரும் என அவர் அறிவித்தார்.
இந்நிலையில் தான் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் துறை வாரியான நிதி ஒதுக்கீடு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மத்திய பாதுகாப்பு துறைக்கு (ராணுவம்) அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ரூ.6.2 லட்சம் கோடி மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.78 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.2.55 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.13 லட்சம் கோடியும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு 2.03 லட்சம் கோடியும், கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு ரூ.1.77 லட்சம் கோடியும், மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்துக்கு ரூ.1.68 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு ரூ.1.37 லட்சம் கோடியும், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு துறை அமைச்சகத்துக்கு ரூ.1.27 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2024-2025 பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் 40,000 சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் பெட்டிகளுக்கு நிகாராக மேம்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தற்போதைய வருமான வரி விகிதமே அமலில் இருக்கும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடல் உணவு ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரித்துள்ள நிலையில், 2 இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கடல்சார் பூங்கா அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் மேலும் 1000 புதிய விமானங்கள் வாங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 18 வயது பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வெறு பெயர்களில் செயல்படும் மகப்பேறு திட்டங்களை ஒரே திட்டமாக ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைபாடுகளை அறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் எனவும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய அளவில் உள்ள சுற்றுலா மையங்களின் விரிவான வளர்ச்சியை மேற்கொள்ளவும், அவற்றை உலக அளவில் வர்த்தகம் செய்யவும் மாநிலங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என்றும் அந்த சுற்றுலா மையங்களில் வளர்ச்சிக்கு நிதியளிப்பதற்காக நீண்ட கால வட்டியில்லா கடன்கள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments