பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் 2024-ம் ஆண்டுக்கான தொடர் கடந்த பிப்ரவரி 13-ந்தேதி மலேசியாவின் ஷா ஆலமில் தொடங்கியது. இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து தனது முதல் போட்டியில், சுபனிந்தா கத்தேதோங்கை 21-12, 21-12 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 39 நிமிடங்கள் நடைபெற்றது.
பி.வி.சிந்துவின் வெற்றி காரணமாக இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரட்டையர் பிரிவில், இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் மற்றும் ஜாலி ட்ரீசா ஜோடி ஜொங்கொல்பம் கிடிதரகுல் மற்றும் ரவ்விண்டா பிரஜோங்ஜல் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடுமையாக போராடி 21-16, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது.
அதே சமயம் ஜப்பானுக்கு எதிரான அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியனான நோசோமி ஒகுஹாராவை வீழ்த்திய இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா இறுதிப்போட்டியில் 11-21, 14-21 என்ற கணக்கில் புசானன் ஓங்பாம்ருங்பானிடம் தோல்வியடைந்தார். இதன்பிறகு நடந்த இரண்டாவது இரட்டையர் ஆட்டத்திலும் இந்தியா தோல்வியடைந்தது.
அதே சமயம் உலக தரவரிசையில் 472-வது இடத்தில் உள்ள 16 வயதான அன்மோல் கர்ப், மீண்டும் ஒருமுறை தீர்மானிக்கும் போட்டியில் களமிறங்கி, உலகின் 45-ம் நிலை வீராங்கனையான போர்ன்பிச்சா சோய்கீவாங்கை நேர் செட் கணக்கில் தோற்கடித்து, இந்தியாவுக்கான முதல் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார்.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சீனா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திய இந்திய அணி, தற்போது இறுதிப்போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி சாதனையுடன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
0 Comments