ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 32,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார்.
மேலும், ஜம்மு காஷ்மீரில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகளைப் பிரதமர் வழங்கினார். 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு' திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.
நாடு முழுவதும் கல்வி மற்றும் திறன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சுமார் ரூ.13,375 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்து, தொடங்கி வைத்தார்.
ஐஐடி பிலாய், ஐஐடி திருப்பதி, ஐஐடி ஜம்மு, ஐஐடிடிஎம் கர்னூல், கான்பூரில் உள்ள இந்திய திறன் நிறுவனம்(ஐஐஎஸ்), மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் இரண்டு நிரந்தர வளாகங்கள் - தேவ்பிரயாக் (உத்தராகண்ட்) மற்றும் அகர்தலாவில் (திரிபுரா) ஆகிய முக்கிய கல்வி நிறுவனங்களின் வளாகங்கள் தொடங்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
ஐஐஎம் ஜம்மு மற்றும் ஐஐஎம் புத்த கயா, ஐஐஎம் விசாகப்பட்டினம் ஆகிய மூன்று ஐஐஎம் வளாகங்களை பிரதமர் தொடங்கிவைத்தார். இதுதவிர நாடு முழுவதும் கேந்திர வித்யாலயாவின் 20 புதிய கட்டடங்களையும், 13 புதிய நவோதயா வித்யாலயா கட்டடங்களையும் தொடங்கிவைத்தார்.
நாடு முழுவதும் 5 கேந்திர வித்யாலயா வளாகங்கள், ஒரு நவோதயா வித்யாலயா வளாகம் மற்றும் நவோதயா வித்யாலயாவுக்கான 5 பன்னோக்கு அறைகள் ஆகியவற்றுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு விரிவான, தரமான, முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் நடவடிக்கையாக, ஜம்முவின் விஜய்பூர் (சம்பா) பகுதியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்.
பானிஹால் - காரி - சம்பர் - சங்கல்தான் (48 கிலோமீட்டர்) மற்றும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட பாரமுல்லா - சிருங்கர் - பானிஹால் - சங்கல்தான் பிரிவு (185.66 கிலோமீட்டர்) இடையேயான புதிய ரயில் பாதை உட்பட ஜம்மு காஷ்மீரில் உள்ள பல்வேறு ரயில் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதலாவது மின்சார ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சங்கல்தான் ரயில் நிலையம், பாரமுல்லா ரயில் நிலையம் இடையேயான ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜம்முவையும், கத்ராவையும் இணைக்கும் தில்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலையின் இரண்டு தொகுப்புகள் (44.22 கிலோமீட்டர்) உள்ளிட்ட முக்கிய சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஜம்முவில் பொதுப் பயன்பாட்டு பெட்ரோலிய கிடங்கு வசதியை உருவாக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். புல்வாமா மாவட்டங்களில் ஒன்பது இடங்களில் 62 சாலை திட்டங்கள், 42 பாலங்கள், போக்குவரத்து தங்குமிடங்களை மேம்படுத்துவதற்கான திட்டம் - 2816 குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
0 Comments