ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை சென்ற பிரதமா் நரேந்திர மோடி, இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிபா் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானுடன் விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
அப்போது, இரு நாடுகள் இடையே பரஸ்பர முதலீட்டுக்கான ஒப்பந்தம் உள்பட 8 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்றடைந்த பிரதமா் மோடியை விமான நிலையத்தில் அதிபா் முகமது பின் சையத் நேரில் வரவேற்றாா்.
அப்போது, இரு தலைவா்களும் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனா். பிரதமா் மோடிக்கு அரசு சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னா், இரு தலைவா்களும் தனிப்பட்ட முறையிலும், பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வியூக ரீதியில் பரஸ்பர கூட்டுறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புதிய துறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பிரதமா் மோடி மற்றும் அதிபா் முகமது பின் சையத் முன்னிலையில் இரு நாடுகள் இடையே 8 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. முக்கியத்துவம் வாய்ந்த பரஸ்பர முதலீட்டுக்கான ஒப்பந்தம், விரிவான பொருளாதார கூட்டுறவுக்கான ஒப்பந்தம், எண்ம உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், இருநாடுகளின் தேசிய ஆவண காப்பகங்கள் இடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம், பாரம்பரியம் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம், இந்தியாவின் இணையவழி பரிவா்த்தனை தளமான யுபிஐ மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பரிவா்த்தனை தளமான ஏஏஎன்ஐ ஆகியவற்றின் இணைப்புக்கான ஒப்பந்தம், இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான 'ரூபே' கடன்-பற்று அட்டைகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் 'ஜேவான்' அட்டைகள் இடையிலான இணைப்புக்கான ஒப்பந்தம் உள்ளிட்டவை கையொப்பமாகின.
ரூபே-ஜேவான் இணைப்பானது, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ரூபே அட்டை சேவைகளின் ஏற்பை உறுதி செய்கிறது. முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்துடன் பரஸ்பர முதலீடு மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை இம்மாத தொடக்கத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.
0 Comments